ADVERTISEMENT

கிஷோர் கே.சாமி வழக்கு; காவல்துறை குறிப்பால் அதிர்ந்த நீதிபதி

06:26 PM Nov 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் மிகவும் இழிவாகவும் மலிவாகவும் எழுதுபவர் கிஷோர் கே. சாமி. தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களையும், ஊடகத்தில் பணியாற்றும் பெண்களையும் மற்ற பெண்களையும் மிக மோசமாகப் பதிவிட்டு வருபவர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

அண்மையில், கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக மத மோதலை உருவாக்கும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த கிஷோர் கே. சாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை கடந்த 15-11-2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “கிஷோர் கே. சாமி மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லை” என்று கோவை காவல்துறை அளித்த ஆவணங்கள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். நீதிபதியே அதிர்ச்சியடைந்து, “பேப்பர் படிப்பதில்லையா, நியூஸ் பார்ப்பதில்லையா?” எனக் கேட்டிருக்கிறார். கோவையில் இதுவரை அவர் மீது வழக்கு இல்லை என்கிற காவல்துறையின் கருத்தை கோர்ட்டில் தெரிவித்த அரசு வழக்கறிஞர், “அவர் மீது நிறைய வழக்குகள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் காவல்துறையினர் அவர் மீது வழக்குகள் இல்லை என எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளனர். அனைத்து வழக்கின் முழு விவரங்களை உயர் அதிகாரிகளிடம் பேசி நீதிமன்றத்திற்கு அளிப்பதற்காகவே நாளை மறுநாள் வழக்கை விசாரிக்க வாய்தா கேட்கிறேன்” என்றார். உடனே நீதிபதி இந்த வழக்கை 18.11.2022 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், 17-11-2022 அன்று ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிற நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆஜராகிற வழக்கறிஞர் மாற்றப்பட்டுக் கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆஜரானார். இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?


நவம்பர் 15 அன்று கோர்ட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து அறிந்த அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அன்று மாலையே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்.


அப்போது, “காவல் துறையினர் வழங்கிய குறிப்பினைத்தான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன், கிஷோர் கே. சாமி மீது பல வழக்குகள் இருப்பது தனக்குத் தெரிந்ததால்தான் முழு விவரங்களை உயரதிகாரிகளிடம் பெற டைம் வாங்கினேன்” எனத் தெரிவித்திருக்கிறார். “காவல்துறையினர் சொல்வதை அப்படியே நீதிமன்றத்தில் தெரிவிப்பது அரசு வழக்கறிஞரின் பணி அல்ல. அவர்கள் சொல்வது சரியாக இருக்கிறதா வழக்கு கோப்பில் அதுகுறித்த விவரங்கள் இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்து தான் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” எனச் சொல்லி கவனக்குறைவாக இருந்ததற்காக அவரை நீக்கிவிட்டுக் கூடுதல் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ராஜ்குமாரை அந்த நீதிமன்றத்திற்கு நியமித்திருக்கிறார் அசன் முகம்மது ஜின்னா. அதனால் இன்று முதல் கூடுதல் குற்றத்துறை அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காவல்துறையின் சார்பில் ஆஜராகிறார். இந்த அதிரடி நடவடிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


மேலும், நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காவல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க அறிவுறுத்தி கோவை போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT