Skip to main content

ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு! விரிவான விசாரணை மேற்கொள்ளவிருக்கும் உயர்நீதிமன்றம்

Published on 15/06/2020 | Edited on 15/06/2020
Case for cancellation of curfew! High Court

 

ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் புதன்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,   ‘கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக,  21 நாட்கள் என்று கூறி,  கடந்த மார்ச் 24-ம்தேதி முதல் ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருவாய் இழந்து வறுமையில் உள்ளனர்.  குறிப்பாக,   குறைவான வருவாய் பெறுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளனர்.  இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், தென்கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவலை தடுத்தது. எனவே, உலகில் இந்த வைரஸுக்கு எதிராக இரு விதமான நடவடிக்கைகளை நாடுகள் எடுக்கின்றன. மேலும், கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை அது நம்முடன்தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.  இதைக் கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு,  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. முதலில் வழக்கை விசாரிக்க நீதிபதிகள்  மறுத்தனர். அப்போது மனுதாரர், உரிய விதிகளைப் பின்பற்றாமல்தான் ஊரடங்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து, குறுக்கிட்டு வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர்,  ஏற்கனவே இதுபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள் மனு குறித்து வரும் புதன்கிழமை விரிவான விசாரணை நடத்தி, அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்