ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு! -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை!

07:37 PM Dec 13, 2019 | kalaimohan

உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 1996-ஆம் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. பின், 2002-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, 2014-ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறி, த.மா.கா. மீண்டும் உருவானது. தற்போது தமாகா தனியாக செயல்படுவதால், கடந்த தேர்தல்களைப் போல, வரும் உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை ஒதுக்கக் கோரி த.மா.கா. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த மனுவை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, சைக்கிள், மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்ஷா என மூன்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கக் கோரி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே சைக்கிள் சின்னத்தை நிரந்ததமாக ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருப்பதால், அதனுடன் இணைத்து விசாரிக்க வேண்டுமென வாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் சின்னம் கோரிய வழக்கை, சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரிய வழக்குடன் இணைத்துப் பட்டியலிட பரிந்துரைத்தார்.

அதன்பின்னர், நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தல் சின்னம் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இரு வழக்குகளையும் டிசம்பர் 16-ஆம் தேதி விசாரிப்பதாக கூறி தள்ளிவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT