
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக பிரமுகரும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வடவள்ளி சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட திமுக வேட்பாளர்களை மிரட்டிய புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத வார்த்தை பேசுதல், கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் அலுவலரிடம் தந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆலந்தூரில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில் பரங்கிமலை காவல்நிலையத்தில் மூவேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.