/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sofia-case.jpg)
பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட சோஃபியா என்பவர் மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி அப்போதைய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்பு “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என முழக்கமிட்டார். கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. விமானத்தில் கோஷமிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குத்தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும் சோஃபியா 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்குச் செல்லும் முன் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் உடல்நலமின்றி இருக்கிறார் எனத்தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட நாளன்று அவர்மீது இ.அ.ச. 285/18 மற்றும் 290, 75(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு இருந்தது. இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சோஃபியா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவில் சோஃபியா மீது பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி தனபால் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)