Advertisment

தி.நகர் சத்யா மீதுள்ள வழக்கு ஒத்திவைப்பு..! 

Case against T. Nagar Satya adjourned

தொகுதி மேம்பாட்டு நிதியைத் தவறாகப் பயன்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் தாக்‌ஷன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா என்கிற சத்தியநாராயணனுக்கு, 2017-18 சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் வசதி மேம்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2017 மே 29ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

மழைக்காலத்தில் குடிநீருக்காகச் சிரமப்படும் பொதுமக்களுக்கு, குழாய்கள் அமைக்கப் பயன்படுத்தவேண்டிய தொகையில், 8 லட்ச ரூபாயை மட்டுமே செலவழித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.மீதத்தொகையை 31 சாலைகள் பராமரிப்புக்காகச் செலவழித்துள்ளதாகவும், அதற்கான டெண்டரையும் டி.எம்.சுப்ரமணியம் என்பவருக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூட்டுடன் வேறு பணிக்கு நிதியைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதால், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஜனவரி 29ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பால் வியாபாரியாக இருந்த சத்யாவிற்கு, தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

sathya T nagar Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe