case against Prakash M. Sami who violated a woman cannot be cancelled'- Court verdict!

மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் பெண்ணிடம் அத்துமீறிய பிரகாஷ் எம்.சாமி என்பவர் மீது, நடிகை காயத்ரி சாய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு மகளிர் வன்புணர்வு தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பிரகாஷ் எம் சுவாமி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisment

தமிழ் சினிமாவில் 90களில் வெளியான 'அஞ்சலி' என்ற திரைப்படத்தில் நடித்த காயத்ரி சாய் என்பவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் தன் மகளுடன் வசித்து வருபவர். முகநூல் லைவ் வீடியோவில் தான் மூத்த பத்திரிகையாளர் என்றும், பிரதமர் மோதி உள்பட பிஜேபியின் மூத்த தலைவர்கள் என்னுடன் மிக நெருக்கமானவர் என அறிமுகமான பிரகாஷ் எம் சாமி என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார் நடிகை காயத்திரி சாய். அதில் கடந்த 2018 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், "எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, எனது மகனுக்கு பாஸ்போர்ட் வாங்கித் தருவதில் உதவிகரமாக இருப்பதாகக் கூறி பிரகாஷ் எம். சாமி என்பவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியிருந்ததோடு அதுகுறித்து காவல்துறையில் புகாரும் கொடுத்திருந்தார்.

2019 மே 27 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, ஜூலை மாதம் 2018 மாலையில், காயத்ரியின் மகனுக்கு பாஸ்போர்ட் தொடர்பாக உதவுவதாகக் கூறிக்கொண்டு அவரது வீட்டிற்கு பிரகாஷ் எம். சாமி சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி காயத்ரி கூறுகையில், “அவர் என் அருகில் அமர்ந்து ( பிரகாஷ் எம்.சுவாமி நடந்துகொண்ட விதம் குறித்து காயத்ரி சாய் எஃப்.ஐ.ஆரில் வேதனையுடன் குறிப்பிட்டிருப்பது மிகவும் பாலியல் வன்முறையாக உள்ளது) என் தோள்மீது கையை போட்டுக் கொண்டு தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். நான், பயத்தில் அலறித்துடித்ததும் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து என்னை அவரது பிடியிலிருந்து காப்பாற்றினார்கள். நான், அவரை என் தந்தை ஸ்தானத்தில்தான் பார்த்தேன்” என்கிறார்.

Advertisment

பிராகாஷ் எம். சாமி பல ஆண்டுகளாக இதுபோல் பல பெண்களிடம் தவறாக நடந்து வந்துள்ளார். அவர்கள், இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக மிகப்பெரிய தலைவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி மிரட்டி இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டுகிறார் காயத்ரிசாய்.

இந்த, சம்பவத்திற்குப் பிறகு தொலைபேசி மற்றும் இணையதளம் வாயிலாக தரக்குறைவான குறுஞ்செய்திகளை அனுப்பிய பிரகாஷ் எம். சாமி தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என காயத்ரி தனது முகநூல் பதிவுகளில் குமுறியிருக்கிறார்.

மேலும், மாரடைப்பால் இறந்துபோன தனது கணவரை, நானே கொன்றுவிட்டதாக பிரகாஷ் எம். சாமி தவறாக பரப்பி விட்டார்,காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் பிரகாஷ் எம்.சாமியின் தனிப்பட்ட செல்வாக்கால் புகார் எடுக்காததால் நீதிமன்றம் மூலம் நடந்த நீண்ட போராட்டத்திற்க்கு அடுத்து எட்டு மாதங்கள் கழித்து சென்னை இராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து பிரகாஷ் எம். சாமி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டிலே பிரகாஷ் எம் சாமியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். உடனடியாக , 2019 லேயே தன் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு தனக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவதை தடுக்கும் உள்நோக்கத்துடன் என் மீது இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில் பிரகாஷ் எம் சாமி மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து காவல்துறை மற்றும் புகார்தாரரான காயத்ரி சாய் ஆகியோர் பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது நிலையில் , சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி அரசர் ஜெயச்சந்திரன், பிரகாஷ் எம் சாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி பிரகாஷ் எம் சாமியின் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி விரைவில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.