
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு சிட்கோவின் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை தற்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்த போது தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆவணங்களுடன் தன்னுடைய மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள், ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ஜெயவேல் விசாரித்து வந்தார். அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் மீது மே 23ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் என்று நீதிபதி ஜெயவேல் தெரிவித்திருந்தார். அதே சமயம் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் தான் இந்த வழக்கு இன்று (23.05.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி வெங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து நீதிபதி வெங்கடவரதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் தரப்பில், “முன்கூட்டியே திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்காக மா. சுப்பிரமணியன் அமெரிக்கா சென்றுள்ளார். இதனால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.