Case against information technology rules; Central government files petition seeking transfer to Supreme Court ..!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தது.

Advertisment

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட பப்ளிஷரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும், இது தன்னிச்சையானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதேபோல, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் உள்பட நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில், தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றங்கள், இந்த வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால், வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.