Case against government issued under Anti-Corruption Act! - Tamil Nadu government ordered to respond!

கடந்த 1988ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018ஆம் ஆண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்தத் தகுதியான அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க, பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதை எதிர்த்து,தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்,‘தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நானும், தி.மு.க. நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்குப் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

புகார்கள் குறித்து விசாரணை நடத்த,ஒப்புதல் அளிக்க,மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுத்துறை செயலாளர் ஒப்புதல்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

Advertisment

மேலும், பொதுத்துறை செயலாளர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவுக்கு அவர் கட்டுப்பட வேண்டும் என்பதால், அவர், முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரியாகக் கருத முடியாது. தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்து, பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்களை ஆளுநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ‘அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியதுதானே?’ எனத் தெரிவித்தது.

இதற்குப் பதிலளித்த அப்பாவு தரப்பு வழக்கறிஞர், அரசாணையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.