
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இந்து சமய அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜீவானந்தம் தலைமையில் ஐவர் பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவானந்தம் நியமனம் தவறு எனச் சொல்லி அறநிலையத்துறையைக் குற்றம்சாட்டி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோவில் அறங்காவலர்களாக இருப்பவர்கள் கோவில் சொத்துக்களில் வாடகைதாரராகவோ, ஒப்பந்ததாரராகவோ, லாபம் பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது என்கிற விதி உள்ளது. அந்த விதி முற்றிலும் மீறப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவிலுக்கு நேரடி தொடர்புள்ள அருணாச்சலேஸ்வரர் கால சன்னதி பூஜை டிரஸ்ட்டில் ஜீவானந்தம் உள்ளார். கோவில் சொத்தில் வாடகைதாரராக உள்ளவரை விதியை மீறி அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து செப்டம்பர் 11 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தவர் இந்த மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஜீவானந்தம் தரப்பு, இது அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு, நான் நேரடியாக கோவில் இடத்தில் வாடகைதாரராக இல்லை என்கிறது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை என்ன பதில் சொல்லப்போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது.