Skip to main content

ஜோதிடத்தை எதிர்த்து வழக்கு.. முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

Case against astrology .. High Court concludes ..

 

ஜோதிடம் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என தெரிவித்துள்ளது.

 

ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கும், இஸ்ரோவுக்கும் உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனுவில், ஜோதிட மூடநம்பிக்கை பல இளைஞர்களின் வாழ்க்கையைப் பாதித்து, அவர்களைக் குற்றவாளிகளாகவும், போதை அடிமைகளாகவும் மாற்றுவதால் ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், தனிநபரின் நம்பிக்கை சம்பந்தப்பட்டுள்ளதால், மனுதாரர் கோருவது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தது.

 

இந்தப் பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், அண்டம் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, மூடநம்பிக்கை போன்ற தீமைகளைக் களைய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்