Skip to main content

விளம்பர நோக்கில் ஆழ்துளைக்கிணறு வழக்கு!- ஜெயஸ்ரீக்கு ரூ.25,000 அபராதம்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

ஆழ்துளை கிணறு விவகாரத்தில் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மணப்பாறையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை பெரம்பூர் பகுதியில் 8 வீடுகள் கொண்ட டைமண்ட் குடியிருப்பில் பொதுப்பாதையில் இரண்டு ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பில் வசிக்கும் ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 

Case for advertising   Jayasree fined Rs 25,000 high court order


ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆழ்துளைக் கிணறுகளை நேரில் சென்று ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் 11-ஆம் தேதி அந்தத் தனியார் குடியிருப்பில் உள்ள இரண்டு ஆழ்துளைக் கிணறுகளை நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும், அவை கான்கிரிட் கலவை மூலம் மூடப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இதனை ஏற்றுகொண்ட நீதிபதி, ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விளம்பர நோக்கத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரு.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.