Shame on carrying a corpse in waist-deep water!

பொதுச் சாலைகளைத் தொடர்ந்து பராமரித்துவரும் அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களின் சாலைகளையும், மயானச் சாலைகளையும் பராமரித்து, சாலைகள் இல்லாத பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம், எழுவச்சிபட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகில் உள்ளது எழுவச்சிபட்டி எனும் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான மயானம், அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் மயானத்திற்குச் செல்ல சரியான பாதை வசதி இல்லாததால், கருவேலங்காட்டு வழியாகவும், கண்மாய்க்குள் இறங்கியும் சடலங்களைத் தூக்கிச் சென்று அடக்கம் செய்துவருகின்றனர்.

Advertisment

அப்படி எழுவச்சிபட்டியில் கடந்த 5ஆம் தேதி, 60 வயதான நாகராஜன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சடலத்தைத் தூக்கிச் சென்ற உறவினர்கள் மழைத் தண்ணீர் நிறைந்துள்ள கண்மாய்க்குள் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சென்றனர். இதுகுறித்து அக்கிராம இளைஞர்கள் கூறும்போது,“கிட்டத்தட்ட 35, 40 வருடமாக இந்த மயானத்தைத்தான் பயன்படுத்துறோம். சாலை வசதி இல்லாததால், அலங்கரிக்கப்பட்ட சொர்க்கரதம் வாகனங்களில் எங்களால் எந்த சடலத்தையும் கொண்டு போக முடியாது. தோளில்தான் தூக்கி சுமக்க வேண்டும்.

மழைக்காலம் என்றால் தண்ணீர் நிறைந்த இந்தக் கண்மாய்க்குள் இறங்கித்தான் சடலங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும். கொஞ்சம் தவறினாலும் சடலம் கண்மாய் தண்ணீரில் விழுந்துவிடும். முக்கிய மற்றும் பொதுச் சாலைகளைப் பராமரிக்கும் அரசு, எங்களைப் போன்ற கிராமங்களில் சடலத்தை தூக்கிப் போக ஒரு நல்ல ரோடு போட்டுக்கொடுக்க வேண்டும்” என்றனர்.