Car wrecked inside the house ... Surviving couple and driver

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது கண்டாச்சிபுரம். இந்தப் பகுதியில் நெடுஞ்சாலையோரமாக வீடு கட்டி வசித்துவருகிறார் 65 வயது அய்யம்பெருமாள். விவசாயியான இவர் நேற்று முன்தினம் (07.09.2021) தனது மனைவியுடன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற ஒரு கார் அதிவேகமாக வந்தது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக எதிரே வந்த லாரியைப் பார்த்து பதற்றமடைந்த கார் டிரைவர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக அய்யம்பெருமாள் வீட்டின் மீது காரைவிட்டு மோதியுள்ளார்.

Advertisment

வீட்டில் புகுந்த கார் அதனருகே இருந்த மின்கம்பம் மீது மோதிவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி நின்றுள்ளது. வீடு, மின்கம்பம், மரம் இப்படி மூன்று இடங்களில் மோதி கவிழ்ந்தது அந்தக் கார். ஆனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அய்யம்பெருமாள் மற்றும் அவரது மனைவி மங்கை ஆகியோரும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் என்பவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து குறித்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர். அவர்கள் சம்பவத்தைப் பார்த்து உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

அங்கிருந்து விரைந்து வந்த போலீசார், அய்யம்பெருமாள், அவரது மனைவி மற்றும் காரை ஓட்டி வந்த பாஸ்கரன் ஆகிய மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அய்யம்பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கார் டிரைவர் கட்டுப்பாட்டை மீறிகார் வீட்டுக்குள் புகுந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.