/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/604_27.jpg)
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய கார் திருடர்கள் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் நேருஜி நகர் பகுதியில் கடந்த மாதம் கார் ஒன்று திருடுபோனது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதேபோல் ஒட்டன்சத்திரத்திலும் ஒரு கார் திருடுபோனது. இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்து இருந்ததால் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் - பழனி பைபாஸ் ரோட்டில் நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஜீப்பில் வேகமாக வந்த நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் பிரபல கார் திருடர்கள் என தெரியவந்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை கீழ பஞ்சம் பட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி சந்தன மாதா கோவில் தெருவை சேர்ந்த மயில் என்ற விஜயகுமார் என தெரியவந்தது. போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தமிழகம் முழுவதும் போலி மதுபானங்களை கடத்துதல், வாகன திருட்டு வழக்குகள் என 35க்கு மேல் அவர்கள் மீது வழக்குகள் இருந்தது தெரியவந்தது.
குறிப்பாக கார், லாரிகளை திருடி விற்று வந்துள்ளனர். அவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள், இரண்டு டேங்கர் லாரிகள், டிப்பர் லாரி, ஒரு ஈச்சர் லாரி, ஒரு டெம்போ டிராவலர், இரண்டு பொலிரோ கார், ஒரு டவேரா கார் என மொத்தம் 15 திருட்டு வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் ஒன்றரை கோடி ஆகும்.
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைதுசெய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)