A car on the road caught fire

சிதம்பரம் அருகேஅண்ணாமலை நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண்ணாடம் அரியராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் விருத்தாசலத்தில் இருந்து காரில் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கு காரை அவரே ஓட்டி வந்துள்ளார். அந்த காரில் அதே ஊரைச் சேர்ந்த காமராஜ்(38) என்பவரும் உடன் வந்துள்ளார்.

இந்நிலையில் கார் அண்ணாமலை நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது புகை மூட்டத்துடன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த காரில் இருந்த மணிகண்டன், காமராஜ் ஆகியோர் அதிர்ச்சியடைந்து காரிலிருந்து இறங்கி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டனர்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனிசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச்சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.