Advertisment

வயர்லெஸ்சில் கேட்ட கார் நம்பர்... நேரில் பார்த்ததும் விடாப்பிடியாக விரட்டிய காவலர் - குவியும் பாராட்டுகள்!

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத். பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் பணி என்றாலும், டி.எஸ்.பி. செங்கமலகண்ணனின் கார் ஓட்டுநராக உள்ளார். புதன்கிழமை மணிக்கூண்டு பகுதியில் ஒரு மருந்துக்கடையில் மருந்து வாங்கச் சென்றபோது, அந்த வழியாக கடைவீதியில் சென்ற ஒரு காரைப் பார்த்ததும் இமைப்பொழுதில் அந்தக் கார் நம்பர், அடையாளங்களை சில நாட்களுக்கு முன்பு காவல்துறை வயர்லெஸ் மூலம் கேட்டது அவர் நினைவுக்கு வந்துள்ளது. உடனே அந்தக் காரை நிறுத்த கைகளால் சைகை காட்ட, கார் நிறுத்தாமல் சென்றதால் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றபோது கடைவீதியில் வேகமாக காரை ஓட்ட முடியாத நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவர் இறங்கி ஓடினார்கள்.

தனது மோட்டார் சைக்கிளையும் நிறுத்திவிட்டு ஓடியவர்களை விரட்டிச் சென்ற முதல்நிலைக் காவலர் பிரசாத், ஒருவனை எட்டிப் பிடிக்க முயன்று கீழே விழுந்து கையில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் கசிவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விரட்டிச் செல்ல, அப்பகுதியில் நின்ற இளைஞர்களும் உதவிக்கு வர, தப்பி ஓடிய ஒருவனைப் பிடித்து அவன் நிறுத்திய காரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது காரில் ஒரு அரிவாள், செல்ஃபோன்கள் ஆகியவை சிக்கின.அந்தக் கார், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையத்தில் வாடகைக்கு எடுத்து ஓட்டுநரைக் கீழே தள்ளிவிட்டு திருடிக்கொண்டு வந்தது என்று போலீசார் வயர்லெஸ் மூலம் சொன்ன கார்தான் என்பதும் அந்தக் காரை மதுரையைச் சேர்ந்த வேலுப்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய இருவர் திருடி வந்ததும், வேலுப்பாண்டிதான் சிக்கியுள்ளான் என்பதும் தெரிய வந்தது.

The car number heard on the wireless ... The policeman who stubbornly chased after seeing it in person

Advertisment

காவலர் பிரசாத் சினிமா காட்சிகளை மிஞ்சும்படி சாலையில் விழுந்து காயமடைந்து கார் திருடனை விரட்டிப்பிடித்ததை அங்கு கூடிநின்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி வெளியான நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, பிரசாத்தின் நினைவுத் திறனையும் உயிரைப் பணயம் வைத்து கார் திருடனை விரட்டிப் பிடித்ததையும் பார்த்து உடனே ரூ. 25 ஆயிரம் வெகுமதி அறிவித்ததுடன் ஃபோனில் தொடர்புகொண்டு பாராட்டினார். தொடர்ந்து தஞ்சை எஸ்.பி ரவ்ளிப்பிரியாவும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை வந்த திருச்சி மண்டல் ஐ.ஜி பாலகிருஷ்ணன், பிரசாத்தை நேரில் அழைத்து பாராட்டியதோடு, “மிகுந்த நினைவுத்திறனோடு நொடிப் பொழுதில் அந்தக் காரை அடையாளம் கண்டு, தனது உயிரை துச்சமாக நினைத்து குற்றவாளியை விரட்டிப் பிடித்து, காயமும் அடைந்திருக்கும் பிரசாத்தை பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தது பாராட்டுகிறேன். இதே போல காவலர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவலர் பிரசாத்தை நேரில் அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். மற்றொரு பக்கம் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இப்படி பல தரப்பிலிருந்தும் காவலருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. உயிரைப் பணயம் வைத்து பிரசாத் பிடித்த வேலுப்பாண்டியை செய்யாறு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

DGPsylendrababu District Collector police Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe