வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகைக்கடை வியாபாரியான நவாஸ் என்பவர் கார் ஒன்றை வாங்க ஆசைப்பட்டார். அதன் காரணமாக இணையத்தில் உலாவரும் ஓ.எல்.எக்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் குவிந்துள்ள கார் விளம்பரங்களை பார்வையிட்டார்.
அப்போது சென்னையை சேர்ந்த சையது என்பவர் போட்டிருந்த கார் விளம்பரத்தை நவாஸ் பார்த்துள்ளார். மேலும் அந்த விளம்பரத்தில் வரும் இனோவா காரை வாங்க விருப்பப்பட்டு அந்த நபரை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் சையதுவோ தான் துறைமுகத்தில் வேலை செய்வதாகவும் அங்கே இறக்குமதி ஆகும் கார்களில் சிறிய சேதங்கள் அடைந்த காரை தான் விற்றுவருவதாகவும் கூறினார். மேலும் காரின் ஆவணங்கள் மற்றும் அவரது ஆவணங்களையும் வாட்ஸாப்பில் அனுப்பியுள்ளார்.
அதை நம்பிய நகைவியாபாரி நவாஸ் அந்த நபரை சந்திக்க சென்னை வந்தார். ஒரு நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சந்தையில் 20 லட்சம் மதிப்புள்ள காரை தான் 12 லட்சத்திற்கு விற்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய நவாஸ் சையதிடம் ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார்.
அதன் பிறகு பிறகு திடீரன்று சையதுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதாக கூறி தான் உடனே கிளம்ப வேண்டும் என்று கூறிவிட்டு காரையும் நவாஸ் கொடுத்த பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார். ஆனால் அதற்கு பிறகு அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் அவரால் சையதுவை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறி போலீசில் புகார் செய்துள்ளார் நவாஸ்.
இதுப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடிவருகின்றனர். சந்தையில் அதிகம் மதிப்புள்ள காரை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி ஆசைகாட்டி ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மோசடி செய்த சம்பவம் ஆன்லைன் வர்த்தகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.