ஈரோடு மாவட்டம், பவானி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தி,மு.க.வைச் சேர்ந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் படுகாயமடைந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பங்கேற்க அந்தியூரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஈரோடு ரயில் நிலையத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். பவானி அருகே வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரல் மழை பெய்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்துஇருக்கலாம் எனக் கூறப்படுகிறது.