Skip to main content

பெட்ரோல் நிலையத்தில் பெண் மீது மோதிய கார்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
car hit a woman at a petrol station

வேலூர் மாவட்டம் அரியூர் தங்ககோவில் உள்ள மலைக்கோடியில் இருந்து பென்னாத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவாரம்பாளையம்.  இக்கிராமத்தின் சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நேற்று பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அதே பங்கில் பெட்ரோல் போட வேகமாக வந்த கார் சாலையில் இருந்து பெட்ரோல் பங்குக்கு திரும்பும் போது வேகத்தைக் குறைக்காமலே திரும்பியது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பெண்ணிண் மீது கார் மோதியது. அத்தோடு மோதிய கார் பெட்ரோல் பங்கின் இயந்திரம் மீது மோதியது, இதில் அந்த இயந்திரம் உடைந்து விழுந்தது. அப்போது பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தப் பெண்ணுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

காரை ரிவர்ஸ் எடுத்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயல, பொதுமக்களில் ஒருவர் ஓடிச்சென்று காரின் சாவியை எடுத்துவிட்டார். அதன்பின் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து அடிபட்ட பெண்ணை பார்த்தனர். காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அரியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கார் ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி இருந்தாரா என்றும் விசாரணை நடத்துகின்றனர். அவ்வளவு வேகமாக அவர் வரவேண்டிய காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சார்ந்த செய்திகள்