Skip to main content

அரசு இலச்சினையுடன் வந்த கார்! போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி! 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
A car with a government logo! Shock waiting for the police!

சேலம் மாவட்டம், அரியானூர், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் ஜன. 30ம் தேதி காலை ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது,  அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த ஒரு காரை மடக்கினர். அந்த காரில் தலைமைச் செயலகம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இலச்சினையும் ஒட்டப்பட்டு இருந்தது. காரில் வந்த இருவரிடமும் காவல்துறையினர் விசாரித்தனர். 

அவர்களில் ஒருவர், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த திருமால் (52) என்றும், மற்றொருவர் பெருங்களத்தூரைச் சேர்ந்த கருப்பையா (60) என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் அவர்கள், தலைமைச் செயலக நிதித்துறையில் நிர்வாக அலுவலர்களாக பணியாற்றி வருவதாகக் கூறியதோடு, அடையாள அட்டையையும் காண்பித்தனர். 

A car with a government logo! Shock waiting for the police!

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தலைமைச் செயலக ஊழியர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சேலத்தில் பிடிபட்ட இருவரும் போலியான நபர்கள் என்பதும், அவர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர். 

இதையடுத்து அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் வைகுந்தம் சுங்கச்சாவடியில் அரசுத்துறை அதிகாரிகள் என்று கூறி சுங்கக்கட்டணம் செலுத்தாமல் காரை ஓட்டி வந்துள்ளனர். தங்களுக்கு அரசுத்துறையில் அனைத்துத் துறை அலுவலர்களையும் நன்கு தெரியும் என்று கூறி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பணம் வசூலித்து மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. 

இதையடுத்து இருவரையும் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். அரசு இலச்சினையுடன் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இருவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அவர்கள் சேலத்திற்கு வந்த நோக்கம் என்ன? யாரிடமாவது அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வசூலித்தார்களா?, இவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் யார் யார்? அரசு அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்