
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார். அதோடு ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து கொண்டு தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவரின் கார் ஓட்டுநராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். உசிலம்பட்டியிலிருந்து நாராயணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நண்பர் ஒருவருடன் 50 லட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆண்டிபட்டியில் நாராயணன் ஸ்ரீதரிடம் காரில் உள்ள 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானின் காரில் ஏறி பெரியகுளம் நோக்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீதர் 50 லட்சம் பணத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஸ்ரீதரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் தனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஸ்ரீதரின் மனைவி கங்கம்மாளும்பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷன் புகார் கொடுத்தும் இருக்கிறார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்துடன் மாயமான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் டிரைவர் ஸ்ரீதரை மடக்கிப்பிடித்து கைது செய்து அதிரடி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)