car driver incident bengaluru lake police investigation

Advertisment

சேலம் அருகேமாயமான கார் உரிமையாளரின் சடலம் பெங்களூரு ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரை மர்ம நபர்கள கொலை செய்து, பெங்களூருவுக்கு கடத்திச்சென்று சடலத்தை ஏரிக்குள் வீசியிருப்பது தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவருடைய மனைவி வெண்ணிலா. ரமேஷ், சொந்தமாக கார் வைத்துவாடகைக்கு ஓட்டிவந்தார். அத்துடன், பழைய கார்களை வாங்கி விற்கும் கார் டீலிங் வேலையும் செய்துவந்தார்.

அக். 16ஆம் தேதி, கார் விற்பனை தொடர்பாக வெளியே சென்றுவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்ஃபோனுக்குத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. நான்கைந்து நாட்களுக்கு மேலாக குடும்பத்தைவிட்டு முன் தகவல்கள் ஏதுமின்றி ரமேஷ் பிரிந்து இருந்ததில்லை.

Advertisment

இதனால் பதற்றமடைந்த அவருடைய மனைவி வெண்ணிலா, தாரமங்கலம் காவல் நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், காணாமல் போன ரமேஷ் கொல்லப்பட்டதாக அக். 24ஆம் தேதிஅவருடைய உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷின் குடும்பத்தினரும், உறவுக்காரர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisment

இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில், ரமேஷ் கொல்லப்பட்டது உறுதியானது. அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடைய மனைவிக்கும், ரமேஷுக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனால், அவர்களிடையே அந்தரங்க தொடர்பு மேலும் நெருக்கமாகியுள்ளது.

இதையடுத்துஅந்தப் பெண்ணின் கணவர், ரமேஷை கொலை செய்யதிட்டம் தீட்டியுள்ளார். அத்திட்டப்படி, ரமேஷை அவருடைய நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 7 பேர் கொண்ட கும்பலுடன் ஒன்றாக சேர்ந்து ரமேஷ் மது குடித்துள்ளார்.

ரமேஷ் உச்சக்கட்ட போதையில் மயங்கிய நிலையில் இருந்தபோது, அவரை அந்தக் கும்பல் காரில் கடத்திச் சென்று, கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளது. பெங்களூருவுக்கு சடலத்தை எடுத்துச்சென்ற கொலையாளிகள், அங்குள்ள ஒரு ஏரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஏரியில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைக்கப்பெற்ற பெங்களூரு காவல்துறையினர் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர்.

ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று (26.10.2021) அல்லது நாளைக்குள் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.