
திருச்சி துவாக்குடி போலீசார் சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தகவல் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘நாகையைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர் ஓட்டிவரும் வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில், கடத்தல் கும்பல் உள்ளது. அந்தக் கார் வேகமாக வருவதாகவும், அதனை மடக்கிப் பிடிக்க’வும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுங்கச்சாவடி தடுப்பை அமைத்து அந்தக் காரை மடக்கிப் பிடிக்க துவாக்குடி போலீசார் காத்திருந்தனர். தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கிவந்த அந்தக் காரைப் போலீசார் நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சுங்கச்சாவடி தடுப்பை இடித்துத் தள்ளியது. கார் இடித்துத் தள்ளிய சுங்கச்சாவடி தடுப்பு மோதி அங்கு நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கீழே விழுந்து காயமடைந்தார்.
அப்போது காரை ஓட்டிச்சென்ற நபர், கொன்றுவிடுவேன் என்று ஒரு விரலை நீட்டி எச்சரிக்கை செய்தபடி மின்னல் வேகத்தில் திருச்சி நோக்கி சென்றுள்ளார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் திருச்சி மாநகர போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் அலர்ட்டாகி காத்திருந்தனர்.
ஆனால் திருச்சி மாநகர எல்லைக்குள் அந்த வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் வரவில்லை. எனவே மாநகர எல்லைக்கு முன்பாக உள்ள ஏதேனும் ஒரு பாதையில் சென்றிருக்கலாம் என தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப் பதிந்து கடத்தல் காரைத் தேடிவருகின்றனர்.