
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே நடு சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லக்கூடிய 100 அடி சாலை வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென காரிலிருந்து புகை வெளியேறி கார் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட காரின் உரிமையாளர் அன்பரசு காரை பாதி வழியில் நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். பின்புறம் வந்த வாகனங்களும் காரில் இருந்து தீ வெளியேறியதை தெரிந்து கொண்டு ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தினர். வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.