Car Bike accident kid passed away

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இருவேல் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராம மூர்த்தி. இவரது மகள் கவிநிலவு(8). இவர், காரப்பட்டு என்ற ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது பெரியப்பாவின் மகள் ஈஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கவிநிலவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். பின் சிகிச்சை முடிந்து அவர்கள், காரப்பட்டு பள்ளி நோக்கி வந்தனர்.

Advertisment

இவர்கள், இருவேல் பட்டு தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கவிநிலவு உயிரிழந்தார். பலத்த காயத்துடன் ஈஸ்வரி மீட்கப்பட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, டி.எஸ்.பி பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கர தாஸ், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அப்பகுதி மக்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன இதனை தடுப்பதற்கு இப்பகுதி நெடுஞ்சாலையில் பேரிகார்டு அமைக்க வேண்டும். மேலும், வேகத்தடை அமைப்பதோடு இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும். அதன் மூலம்தான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றனர். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.