ADVERTISEMENT

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் அரசு பேருந்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!

04:13 PM Aug 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி அருகே அரசு பஸ்சும் ஒரு காரும் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த எபினேசன், இமான், யுவான், ரபேக்கா ஆகியோர் ஆவர். அவரது தாய் மகன் உட்பட 6 பேர் தாம்பரத்தில் இருந்து ஊட்டிக்குச் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலைப் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி வழியாக சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக காருடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.

இதில் அரசு பேருந்தின் கீழ் பகுதியில் கார் சிக்கிக்கொண்டது. இதையடுத்து சிறிது தூரம் சாலையில் காரை இழுத்துச் சென்ற அரசு பேருந்து அப்பகுதி விவசாய நிலத்தில் இருந்த 15 அடி பள்ளத்தில் இறங்கி நின்றது. பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் விபத்து நடந்ததை கண்டு அலறி சத்தம் போட்டுள்ளனர். பஸ்சில் சுமார் முப்பத்தி மூணு பயணிகள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அரசு பஸ்சை சேலம் மாவட்டம் ஊனத்தூரைச் சேர்ந்த அழகுராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் லேசான காயமடைந்த பஸ் பயணிகளை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து இரவு 8 மணி அளவில் நடந்ததால் சேலம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தியாகதுருகம் புறவழிச்சாலை பகுதியில் விபத்து நடந்துள்ள தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி, தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் தரப்பில் கூறும்போது, “கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் புறவழிச் சாலையை கடக்கும் போது இரு பகுதிகளிலும் இருந்தும் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்பதை நின்று கவனித்து பார்த்து விட்டு சாலையைக் கடந்து செல்ல வேண்டும். ஆனால் பல வாகன ஓட்டிகள் இருபுறமும் வாகனம் வருகிறதா என்பதை கவனிக்காமல் அலட்சியமாக வாகனத்தை செலுத்துவதால் இது போன்று விபத்துகள் நேர்கின்றன என்று கூறுகின்றனர்.

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஆகிய புறவழிச்சாலை பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை பகுதியில் மட்டும் நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இருவழி சாலையாக குறுக்கி அமைத்துள்ளதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். தொடரும் விபத்துக்களையும் அதன்மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தடுப்பதற்கு காவல்துறையும் நெடுஞ்சாலைத்துறையில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT