Car and Bus accident four passed away

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூர் அடுத்துள்ள ஆவட்டி அருகே இன்று அதிகாலை திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதி காரை நூறு மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று சாலை ஓரம் இருந்த வேப்பமரத்தில் மோதியதில் கார் மோசமாகநொறுங்கியது. இதனால் காரை ஓட்டி வந்த மன்னார்குடியைச் சேர்ந்த மதிவாணன் மற்றும் காரில் பயணித்த கௌசல்யா, தவமணி என்ற இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு வயது பெண் குழந்தை சாரா ஆகிய நான்கு பேரும் காருக்கு உள்ளேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

அதே காரில் பயணம் செய்த துரைசாமி என்ற முதியவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பூர் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர், இரண்டு வயது பெண் குழந்தையை சடலமாக மீட்டனர். முதியவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் (திட்டக்குடி பொறுப்பு) ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்து குறித்து இராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.