Skip to main content

திருவண்ணாமலையில் பயங்கர விபத்து! ஆறு பேர் பலி! 

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Car accident near thiruvannamalai seven passes away

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில், ஒரு கார் பெங்களுரூவை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், எதிர்புறத்தில் திருவண்ணாமலையை நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. 

 

இந்த விபத்தைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு காவல்துறையினருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால், அந்த காரில் பயணித்த ஆறு பேர் பரிதாபமாக பலியானர். 

 

அந்த காரில், இரு சிறுவர்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்ததாகவும், இவர்கள் அந்தப் பெண்ணைத் தவிர மற்ற அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அந்தப் பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விபத்தில் பலியான ஆறு  பேரின் உடலையும் மீட்ட போலீஸார், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்டிருப்பதால் அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நடந்த சம்பவம்; சாலையின் நடுவே கொழுந்துவிட்டு எரிந்த கார்கள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ad

அரியலூர் அருகே உள்ள செட்டி திருக்கோணம்  கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் மனைவி செல்வம்பாள். இருவரும் பிரிங்கியம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காகத் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கருங்காலி கொட்டாய் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ராமசாமி  திடீரென சாலையில் இருந்து திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராமசாமி மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி உயிரிழந்தார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரை நெய்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த நிலையில் இசக்கி முத்து காரின் பின்னால் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காரில் வந்துள்ளார். அவர் விபத்து நடந்த காரின் மீது மோதாமல் இருக்க, தனது காரை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அந்த நேரத்தில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அறிவொளி என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருக்க, அவர் கார் மீது ஜெயக்குமார் கார் மோதியுள்ளது. எதிர்பாராத விதமாக இரு கார்களும் நேருக்கு நேர் மோதியதில் தீ பற்றியது. இதனால் காரில் இருந்தவர்கள் அவசர அவசரமாக இறங்கி உயிர்தப்பியுள்ளனர்.

இரு கார்களும் சாலையில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க, தகவலின் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த கார்களின் மீது தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர். இதனால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் தப்பிக்க முயன்ற போது, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.