Skip to main content

'தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது'- ஆட்டோ கட்டண உயர்வுக்கு அரசு பதில்

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
auto

ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று மினி பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய் 50 பைசா பெறப்படும் எனவும் இந்த புதிய கட்டண உயர்வு பிப். 1 ஆம்  தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆட்டோ சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டண உயர்வை மேற்கொள்ள முடியாது. அரசுதான் முடிவு செய்யும். ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக முடிவுகள் அனைத்துமே அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது. எனவே பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சில ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக வெளியாகும் அறிவிப்புகள் எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. நாளை ஆட்டோ சங்கங்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம். புகார் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்