‘சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயத்தில் தலையிட முடியாது’ - உயர் நீதிமன்றம்

‘Cannot interfere in a matter subject to the authority of the Speaker’ - High Court

திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களை எப்படி அமரவைக்க வேண்டுமென்பது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதால், அந்த லட்சுமண ரேகையைத் தாண்ட முடியாது என கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமிநாதன், சதன் திருமலை குமார், ரகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த எட்டு எம்.எல்.ஏ.க்களையும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதக் கூடாது என உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 8 எம்.எல்.ஏ.க்களையும் எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருத முடியும் என்றும் இது ஜனநாயாகத்தை கேலி கூத்தாக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது எனவும் இந்த எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களாக கருதி, சட்டமன்றத்தில் தனி இருக்கை வழங்க கூடாது எனவும், சட்டமன்றத்தில் பேச தனியாக நேரம் ஒதுக்க கூடாது எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பேரவை உறுப்பினர்களை எங்கு அமரவைக்க வேண்டும், எவ்வாறு பேச அனுமதிக்க வேண்டும் என்பவை சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும்திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். சபாநாகரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் லட்சுமன ரேகை தாண்டப்படக் கூடாது என்றும், வழக்கில் எந்த பொது நலனும் இல்லை என்றும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Subscribe