cannabis at tenkasi

கொடூரக் கரோனா விரல் சூப்பும் குழந்தைகள் முதல் அந்திமக்கால வயோதிகர்கள் வரையிலும் வஞ்சகமில்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் வளரும் இளந்தலைமுறைகள் வழிதவறி அண்டக்கூடாத போதைக்கு அடிமையாகி மூளையை மழுங்கடிப்பதுதான் பெருத்த சோகம்.

Advertisment

தென்காசி மாவட்டத்தின் கேரள பார்டர் ஏரியாவான பண்பொழி புளியரை, செங்கோட்டை மற்றும் வடகரைப் பகுதிகள் வளமான விவசாயம் கொண்ட காட்டுப் பகுதிகள். குறிப்பாக செழிப்பான இந்த பகுதியிலுள்ள வடகரை, அச்சன்புதூர் மற்றும் வாவா நகரத்திலுள்ள பெரும்பாலானோர் தங்களின் பெண்டு பிள்ளைகளை, வாழ வைக்கவும் அவர்களைப் படிக்கவைத்து பயனுள்ள வேலைகளில் அமர்த்த வேண்டுமென்ற லட்சியத்தில் வெளிநாடு சென்று உழைத்துகஷ்டப்படுகின்றனர்.

Advertisment

அண்மையில் இந்த பகுதியின் இளைஞரோடு பள்ளிப் பருவத்திலிருக்கும் சிறுவர்களும் சேர்ந்து மலைக்காட்டுப் புறத்தில் கஞ்சா அடித்து லயிக்கிற வீடியோ ஒன்று வாட்ஸ்அப்களில் உலா ஆகியிருக்கிறது.

புளியரை பண்பொழி மற்றும் வடகரைப் பகுதியிலுள்ள ஸோர்சுகளிடம் பேசியபோது, “குடும்பத்தையும், பெற்ற பிள்ளைகளை வளர்க்கவும், அவர்களைக் கல்வியில் முன்னேறவைக்க வேண்டிய வைராக்கியத்தில் வெளிநாட்டில், பெற்றவர்கள் அரும்பாடு படுகின்றனர். கரோனா நடப்புகாலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது தெரியவில்லை. படித்த இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பின்றி வீடுகளில் வெட்டித்தனமாய் முடங்கி இருக்கும் சூழல், தெளிந்த அவர்களின் மனதில் விபரீத புத்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

மலையடிவாரம் என்பதால் போதை சரக்குகளான கஞ்சாவுக்குபஞ்சமில்லை. உடன் டாஸ்மாக் சரக்குகளும் கைகோர்க்கின்றன. இதுபோன்ற சிறுவர்கள், இளைஞர்களைகுறிவைக்கும் போதை வியாபாரிகள் அவர்களை போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். வியாபாரச் சந்தையாக மாற்றிவிடுகிறார்கள். வெளிநாட்டு சம்பாத்யம் என்பதால் முடங்கிக் கிடக்கும் இவர்களிடம் பணம் தாராளமயமாகிறது.

போதைப் பொருளை அடித்துக் கொண்டு காட்டுப்புறங்களில் மெய் மறந்து கிடக்கிறார்கள். போதை அடிமைகளான அவர்கள் கையில் பணமில்லை என்றால் வீட்டுப் பீரோக்களிலேயே துணிந்து கை வைத்துவிடும் கொடூரமும் நடக்கிறது. காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாதை மாறிப் பயணிக்கும் இந்த இளைஞர்களை நேர் கோட்டிற்கு கொண்டு வரமுடியும், கவனிக்க வேண்டும் என்ற அக்கரையை வெளிப்படுத்தினர்.