cannabis rampant in Yelagiri Hills

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை ஒரு காலத்தில் சந்தனமரத்துக்குப் பெயர் போனது. இங்குள்ள சந்தன மரங்களைத்திருட்டுத்தனமாக வெட்டி பணக்காரர் ஆனவர்கள் பலர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் உண்டு. சந்தனமரக் கடத்தலுக்கு பின்னணியில் இருந்தவர்கள் இன்று அரசியலில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஜவ்வாது மலையின் ஒரு பகுதிதான் ஏலகிரி மலை. ஏழைகளின் ஊட்டி என்கிறார்கள் ஏலகிரியை.

ஏலகிரி உண்மையில் ஏழைகளுக்கானதா எனக் கேட்டால் இல்லை. எந்த விதத்திலும் ஏழை மக்களுக்கான சுற்றுலாத்தலமாக இம்மலை இல்லை என்பதே எதார்த்தம். ஏலகிரி மலையில் சிறிய படகு இல்லம், ஒரு பார்க் இவையே உள்ளன. இவை மட்டுமே அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் உள்ளன. தனியார்கள் சிலர் பறவைகள் இல்லம், பொழுதுபோக்கு அம்சங்கள் வைத்திருக்கின்றனர். இதன் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் தனி நபருக்கு குறைந்தது 500 ரூபாய் இருக்க வேண்டும். மலையில் பகல் வேளையில் வீசும் இதமான குளிர் காற்றும், மாலை 4 மணிக்கு தொடங்கும் உடலை ஊசிபோல் குத்தும் குளிரை இதமாக அனுபவிக்கவே மக்கள் வருகிறார்கள். ஏழை மக்கள் இந்த குளிரை வெட்டவெளியில் தான் அனுபவிக்க முடியும், இரவு அங்கே தங்கி அனுபவிக்க முடியாது. காரணம் அறைகளின் கட்டணம்.

மிக சாதாரண விடுதியில் ஒரு அறையில் இரண்டு பேருக்கான தினசரி கட்டணமே 2 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. சில விடுதிகளில் 15 ஆயிரம் ரூபாய்க்குமேல் வரை அறை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு தொகை தந்து எந்த ஏழை மக்களும் தங்க முடியாது. வேறு யார் தங்குகிறார்கள்? பெரிய பணக்கார இளைஞர்கள்– இளைஞிகள் வந்து தங்குகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து பிரபல தனியார் பொறியியல், மருத்துவ பல்கலைக்கழக மாணவ – மாணவிகள், பெங்களுரூ ஐடி துறையில் பணியாற்றும் இளசுகள்தான் இங்கு வந்து குவிகின்றனர். குடும்பத்துடன் வந்து தங்குபவர்கள் என்பது வெகு குறைவு. தற்போது கார்ப்பரேட் கம்பெனிகள் இங்கு பார்ட்டிகளை அரேஞ்ச் செய்கின்றனர். கும்பல் கும்பலாக வந்து தங்குவது ஒருபுறம். அவர்கள் மூலமாக மது, மாது, போதை பவுடர் போன்ற சட்டவிரோத காரியங்கள் நடப்பது மறுபுறம் என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.

Advertisment

கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திராவை சேர்ந்த 7 பெண்கள், இரண்டு ஆண்கள் வந்து இரவு தங்கியுள்ளார்கள். ஆந்திரா சினிமா துறையான டோலிவுட் நடனப் பெண்ணும்சித்தூர் மாவட்டம் வெகுரு குப்பத்தைச் சேர்ந்தவருமான25 வயதான ஹீமா, விடுதி அறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரின் அறையில், உடலில் போதைப் பொருட்கள் இருந்துள்ளன. அவர் கார்ப்பரேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பார்ட்டிக்காக வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கே என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இதனை சாதாரண தற்கொலை வழக்காக ஏலகிரி போலீஸார் விசாரணை நடத்தி முடித்தனர்.

போதைப் பொருட்கள் நடமாட்டம் வெகு சாதாரணமாக இங்குள்ள சில ஹோட்டல்களில் புழங்குகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட ரிசார்ட்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றன. இவ்வளவு ரிசார்ட்டுகள் இல்லாத சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நள்ளிரவு போலீஸ் நடத்திய ரெய்டில் நூற்றுக்கும் அதிகமான கல்லூரி, தனியார் கம்பெனி இளசுகள் போதை பவுடர்களோடு சிக்கினர். அதில் சிக்கியவர்கள் பெரும்பாலும் பெரிய இடத்து பசங்களும், பொண்ணுங்களும் என்பதால் சிலர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு மற்றவர்களை எச்சரிக்கையோடு அப்படியே அனுப்பிவிட்டனர். அதன்பின் இப்போது சில விடுதிகளில் வார இறுதி நாட்களில் பார்ட்டிகள் நடக்கின்றன. எது நடந்தாலும் போலீஸார் அதனைக் கண்டுகொள்வதில்லை.

காரணம்இங்குள்ள விடுதிகளை நடத்துபவர்கள் அரசியல் புள்ளிகளாக இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள்பலரும் இங்கு விடுதி வைத்து நடத்துகிறார்கள். இதனால் இங்கு நடப்பதை போலீஸ் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இரவெல்லாம் மது, பார்ட்டி என இருந்துவிட்டு காலையில் மலையை விட்டு கீழே இறங்கும் இளசுகள் சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரை விடுவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. பண்பாடு, கலாச்சாரம், மக்கள் ஒற்றுமைக்கு பெயர் போன இந்த மலை, மக்களின் வாழ்க்கையில் சுற்றுலா பயணிகள் என்கிற பெயரில் பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டார்கள். இதனால் தங்களது பழக்க வழக்கங்களில் பெரிதும் மாற்றமடைந்துள்ளார்கள் என்கிறார்கள் மலைக்கிராம மக்கள்.