Skip to main content

சர்வதேச சந்தைக்குக் கடத்த முயன்ற கஞ்சா ஆயில்..!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Cannabis oil caught at tuticorin

 

உணவுப் பொருட்களான மஞ்சள், அரிசி முதல் போதை பொருட்களான கஞ்சா, ஹெராயின் பிரவுன் சுகர் உள்ளிட்டவை வரை தென்மாவட்ட தூத்துக்குடியின் கடல் மார்க்கமாகக் கடத்தப்படுவது அண்மையில் சகஜமான தொழிலாகவே மாறிவிட்டது.

 

அந்த வகையில், இப்போது புதிய போதை வஸ்து ‘க்யூ’ பிரிவிடம் மாட்டியிருக்கிறது. க்யூ பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா, உதவி ஆய்வாளர்களான சிவமணி, தர்மராஜ் உள்ளிட்ட போலீஸ் டீம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளி கிராமத்தின் நவஜீவன் விவசாயப் பண்ணையை முற்றுகையிட்டது. அதிரடியாக நுழைந்த க்யூ பிரிவின் அலசலில், ஆயில் போன்ற, பிளாஸ்டிக் பேக்குகளிலிருந்து டப்பாவில் அடைக்கப்பட்ட, மூன்று கிலோ மணக்கும் அந்தப் பொருளையும், அங்கிருந்த 2 பேரையும் மடக்கி விசாரித்தனர். இது கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சா ஆயில், அதிக போதை தரும் சரக்கு. கடல் வழியாக மாலத்தீவிற்கு அனுப்பவிருந்ததாக சொல்லியிருக்கிறார்கள்.

 

மேலும், அவர்களது விசாரணையில் பிடிபட்ட நாகல்குளம் பகுதியின் பிரிட்டோவும், பண்ணைவிளையின் விக்டரும், தாங்கள் கடத்தல் கூலிகள். தேனியிலிருந்து கொண்டு வந்தவர் கொடுத்ததை, டப்பாக்களில் அடைத்து மாலத்தீவிற்கு அனுப்பும்படியான தகவலையும் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட ஹசீத் எனப்படும் கஞ்சா ஆயிலின் இந்தியச் சந்தை மதிப்பு 45 லட்சம் என்கிற க்யூ பிரிவு அதிகாரிகள், சர்வதேச சந்தையில் இதன் கிராக்கி ஒன்றரை கோடி (இந்திய மதிப்பு) என்கிறார்கள். கஞ்சா ஆயிலையும் பிடிபட்ட இருவரையும் போதை தடுப்பு யூனிட்டான என்.ஐ.பி. வசம் ஒப்படைத்திருக்கிறது க்யூ பிரிவு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.