Cannabis dealer escapes from police Passed away in an accident!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற நபர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்துவந்தார். இவரும், இவரது மனைவியும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisment

இவர், தேனி பகுதியில் கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதியில் நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததன் அடிப்படையில், பொன்னுச்சாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது பொன்னுசாமியிடம் 15-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கையும் களவுமாக பிடிபட்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து மேல் விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்கள். அப்போது, கரூர் மாவட்டம், எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கஞ்சா வியாபாரி பொன்னுச்சாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பொன்னுச்சாமி பலியானார்.

பலியான கஞ்சா வியாபாரியின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பினர். பொன்னுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி, குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், தனது கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும், நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.

Advertisment