
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பினை அறிவித்திருந்தது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, சர்க்கரை அதனுடன் கரும்பும் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இன்று முதல் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்ற நிலையில், சில இடங்களில் அரசு அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கரும்புகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொங்கல் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருந்த சில நாட்களுக்குப் பின்பு பொங்கல் தொகுப்பு முறையாக மக்களிடம் சென்று சேருவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு. தரமான கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனப் பல்வேறு அறிவுறுத்தல்களைத் தமிழக அரசு வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்குத் தரமான பச்சை அரிசி, கரும்பு வழங்க வேண்டும் என மீண்டும் ரேஷன் கடை ஊழியர்களைத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சை அரிசி, பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை விநியோகிக்கக் கூடாது. ஆறு அடிக்குக் குறையாமல் கரும்பு தர வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் காய்ந்து போகாமல் இருக்க ஈரச் சாக்கு போட்டுப் போர்த்தி வைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளது.