தமிழகத்தில் சமீபத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கரோனா தடுப்பின்போது ஒரு வேளை துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் அவர்களுடைய இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும்இன்று காலை முதல் அனைத்து அரசு மருத்துவர்களும் கறுப்புப்பட்டை அணிந்து பணிபுரியும்படி அனைத்து அரசு மருத்துவர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது. தங்களது அவலநிலை குறித்து மருத்துவர்கள் போராடி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம்.

 nakkheeran app

Advertisment

மருத்துவர்கள், பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு கவச உடைகள், முக கவசங்கள், தங்கும் வசதிகள், உணவு முதலியவை வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றை போதிய அளவு கொள்முதல் செய்யவில்லை,உற்பத்தியும் செய்யவில்லை. பொது இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் மருத்துவர்களிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

கரோனா நோய்க்காக சிகிச்சை வழங்கி, தொற்றுக்கு ஆளாகி வீரமரணமடைந்த டாக்டர் சைமன், டாக்டர் லட்சுமி நாராயணரெட்டி, டாக்டர் ஜெயமோகன் ஆகியோரின் உடல்களுக்கு கௌரவமான முறையில் இறுதிச்சடங்குகள் நடக்கமுடியாத அவலநிலை ஏற்பட்டது. இத்தகைய இறுதி சடங்குகளில் தமிழக அரசை சேர்ந்த அமைச்சர்களோ, அதிகாரிகளோ பங்கேற்று அஞ்சலி செலுத்தாதது மிகுந்த வேதனைக்குரியது.

கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை வழங்கி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட டாக்டர். சைமன் ஹெர்குலஸ் இறப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று இரவு ஒன்பது மணியளவில், மெழுகுவர்த்தி ஏந்தி அல்லது விளக்கு மற்றும் டார்ச் லைட் ஏந்தி அஞ்சலி செய்வது என்ற அடிப்படையில் சென்னை பார்வதி நகரில் உள்ள ஸ்ட்ரீட் விஷன் தொண்டு நிறுவனம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.