
திருச்சி மாநகராட்சி மண்டல தலைவர்கள் தேர்தல் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நியமனக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலும் பிற்பகல் 2.30 மணிக்கு நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலை 9.30 மணி அளவில் நியமனக் குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது.
இந்த நியமனக் குழு உறுப்பினர் பதவியை பொருத்தமட்டில் 65 கவுன்சிலர்களும் சேர்ந்து ஒருவரை மட்டுமே தேர்வு செய்வார்கள். ஆணையாளர் முஜிபுர் ரகுமான் நியமனக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றார். அப்போது தி.மு.க. தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர் முத்து செல்வத்துக்கு பதிலாக இன்னொரு தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஏற்கனவே அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முத்து செல்வமும் கூட்ட அரங்கில் அமர்ந்து இருந்தார். அவர் நாகராஜுக்கு பொன்னாடை அணிவித்து விட்டு கூட்ட அரங்கில் இருந்து வேகமாக வெளியே சென்றார். இந்தத் திடீர் வேட்பாளர் மாற்றம் கூட்ட அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.