
தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க. - பா.ம.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று (10/03/2021) அ.தி.மு.க. - பா.ம.க. இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க.வின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், மாநில வன்னியர் சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தும் விலகுவதாக வன்னியர் சங்க நிர்வாகி வைத்தி தகவல் வெளியிட்டுள்ளார். உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் வைத்தி. ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளராக பாலு என்பவர் அறிவிக்கப்பட்டதால் அதிருப்தியில் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வைத்தி விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.