கட்டாய கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யுங்கள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பொற்றோர்கள் தங்களது குழந்தைகளை இலவச கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர். இப்படி இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேரும் குழந்தைகளிடம் இருந்து கட்டாயமாக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வியில் சேர்க்க பெற்றோர்களிடம் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது என மே.5ஆம் தேதி நாளிதழில் செய்தி வெளியானது. இலவச கட்டாய கல்வியில் சேரும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் தவிர புத்தகம், சீருடை உள்ளிட்ட இதர செலவினங்களை பெற்றோர்கள் செய்ய வேண்டும் என கட்டாயபடுத்துவதாக நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டேன். புத்தகம் மற்றும் சீருடைக்காக கட்டணமாக 10 ஆயிரம் வரை செலவாகிறது.
இதனால் ஏழை குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. கட்டாயமாக கட்டணம் வசூலிப்பது இத்திட்டத்திற்கு எதிரான செயலாக உள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். மேலும் இத்திட்டத்தில் பணக்காரர்கள் மற்றும் அரசு பணியில் இருப்பவர்கள் சிலர் தங்களது வருமானத்தை குறைவாக காட்டி சான்றிதழ் பெற்று பள்ளியில் குழந்தைகளை சேர்க்கின்றனர்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
இதனால் ஏழை குழந்தைகளின் கல்வி பாதிக்கபடுகிறது. மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, "தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும்.
அப்படி அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைபட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.