Cancel the celebration; Ottenchatram vegetable market in disappointment

அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. முண்டக்கை, சூரல்மலை, மேற்பாடி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் பாதிப்புகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. வயநாட்டில் நடந்த இந்த நிலச்சரிவு எதிரொலியாக நாடு முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

படிப்படியாக மீண்டு வரும் வயநாட்டில் தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்டு நடைமுறை வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கி வருகிறது. இந்தநிலையில் கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தின் எதிரொலியாக பல்வேறு இடங்களில்ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா அரசும் ஓணம் கொண்டாட்டங்களை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஓணம் பண்டிகைக்காக அனுப்பிவைக்கப்பட காத்திருந்த காய்கறிகள் எதிர்பார்த்த விலை போகாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கொண்டு செல்லப்படும். பண்டிகை நேரம் என்பதால் காய்கறியின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்நிலையில் ஓணம் விழா கேரளாவில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விவசாயிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.