
10வது ஆண்டாக இந்த ஆண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முன்தினம் (24.05.2025) நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபுசாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேசியிருந்தார். முதல்வரின் டெல்லி பயணம் குறித்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் விஜய் ஆகியோர் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

குறிப்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்' என விமர்சித்திருந்தார்.

விஜய்க்கு திமுக கடும் எதிர்வினையாற்றி வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் 'விஜய் செய்வது பச்சா பொலிடிகல்'' ஆதாவது குழந்தைத்தனமான அரசியல் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக மாணவரணி நிர்வாகி ராஜீவ் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எத்தனை பேருக்கு விஜய்யின் கொடநாடு குழு குழு பயணம் தெரியும். ஜெயலலிதா தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை கோடநாட்டில் வைத்து ஆட்சி செய்த பொழுது தன்னுடைய படம் வரவேண்டும் என்பதற்காக நான்கு நாட்கள் காத்திருந்து கைகட்டி கொடநாடு பங்களாவில் இல்லை கொடநாடு கேட்டுக்கும் முன்பு நின்று கைகட்டி ''அம்மா மன்னித்து விடுங்கள்'' என யாசகம் பெற்றவர்தான் விஜய்.
தமிழ்நாட்டின் உரிமையை பெறுவதற்காக தமிழக முதல்வர் திராணியோடும், தெம்போடும் எதிர்த்துச் சண்டையிட்டு சட்டப்படியான உரிமை பெறுவதற்கு டெல்லி போயிருந்தார். இன்று உரிமை வந்திருக்கிறது. இது விஜய்க்கும் எடப்பாடிக்கும் புரிந்திருக்க வேண்டும். விஜய் அவருடைய தந்தையாரை கூட்டிக் கொண்டு உங்கள் படம் திரைக்கு வரவேண்டும் என கொடநாடு குளிரில் நான்கு நாட்கள் கேட்டுக்கு வெளியே காத்திருந்து அர்த்த ராத்திரியில் ஜெயலலிதாவிடம் சுயமரியாதை அடமானம் வைத்து ஜெயலலிதாவை சந்தித்த விஜய் சொல்லி இருக்கிறார் குடும்ப நலனுக்காக முதல்வர் பிரதமரை சந்தித்தார் என்று'' என்றார்.