publive-image

குமரி மாவட்டம், குளச்சலில் மீன் விற்பனை செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல்ல இருந்தவாணியக்குடியை சேர்ந்த செல்வமேரியை(70), குளச்சல் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது, மீன் நாற்றம் வீசுகிறது என கூறி பஸ் கண்டக்டர் பஸ்சில் இருந்து இறக்கிவிட்டார். தனக்கு ஏற்பட்ட துயரத்தால் அம்மூதாட்டி பேருந்து நிலையத்திலேயே மனமுடைந்து அழுதார். மூதாட்டி செல்வமேரி, கண்ணீருடன் புலம்பியதை பஸ் நிலையத்தில் நின்ற பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சிறிதுநேரத்தில் வைரலானது.

Advertisment

அதனைத் தொடர்ந்து பஸ் கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல், பஸ்நிலையம் நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரை அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisment

பஸ்சில் இருந்து மீனவ பெண்ணை இறக்கிவிட்ட சம்பவத்துக்கு முதல்வா் மு.க ஸ்டாலினும் வருத்தம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட செல்வமேரி கூறும் போது, “என்னை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட கண்டக்டர் மற்றும் அதற்கு தொடர்புடைய இரண்டு பேரையும் சஸ்பென்ட் செய்து இருக்கிறார்கள். இந்த தண்டனை அவர்களுக்கு வேண்டாம். இது அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கும்.

அந்த 3 பேரையும் நான் மன்னித்து விட்டேன்; அதுபோல் அரசும் அவர்களை மன்னிக்க வேண்டும். மேலும் பஸ்சில் இருந்து என்னை இறக்கிவிட்டபோது அதை என்னால் தாங்க முடியாமல் அழுதுவிட்டேன். என்னை இறக்கி விட்டவர்களுக்கும் என்னை போல் ஒரு தாய் இருப்பார்; அந்த தாய்க்கு இதே போல் ஒரு சம்பவம் நடந்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? தாய்க்கு சமமானவர்களை அவமதிக்காமல் அவர்களிடம் மரியாதையாக பஸ் கண்டக்டரும் டிரைவரும் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.