Skip to main content

'ஜூலை 31ஆம் தேதி வரை ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி'!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

thoothukudi district sterlite oxygen production supreme court order

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க அனுமதி வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (27/04/2021) உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு வழக்கறிஞர், நிறுவனத்தின் வழக்கறிஞர், ஆலையால் பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர். 

 

இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்த அமர்வு, ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (28/04/2021) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான அனுமதி நீட்டிக்கப்படுமா என்பது அப்போதைய சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான மின்சாரம் உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழு பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்டக் காவல்துறை எஸ்.பி., தூத்துக்குடி மாவட்ட தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.