/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras-highcourt-1_2.jpg)
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன் வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரோனா ஊரடங்கின் போது கடந்த 6 ஆம் தேதி சென்னை சேத்துபட்டு சிக்னலில் காவலர்களுடன், வழக்கறிஞர் தனுஜா ராஜன், மற்றும் அவரின் மகள் ப்ரித்தி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில்’க்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, புகார்கள் பெறாமலேயே தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா? என பார் கவுன்சிலுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றி விடும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார்.
வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும் வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும் இதற்கு ஆதாரமாக வழக்கறிஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளிவருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்து நாளைக்கு தள்ளிவைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)