Advertisment

பிரதமர் மோடியை விட கல் நெஞ்சக்காரர் வேறு யாராவது இருக்க முடியுமா? - செல்வபெருந்தகை

Can anyone be more heartless than Prime Minister Modi says selvaperunthagai

பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. போன்ற வகுப்புவாத நச்சு சக்திகள் தலை தூக்க முடியாத வகையில், தமிழ்நாட்டு மக்களின் விழிப்புணர்வோடு உள்ளனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவ செல்வப்பெருந்தைகை கூறியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றப்படவில்லை என கோணி புளுகன் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கருத்து கூறியிருக்கிறார். பதவி போன பிறகு காணாமல் போய்விட்டதாக யாரும் கருதக் கூடாது என்பதற்காக தனது இருப்பை காட்டிக் கொள்வதற்கு இத்தகைய அவதூறு கருத்துக்களை கூறி வருகிறார்.

Advertisment

2014 மக்களவை தேர்தல் பரப்புரையின் போது நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகளில் எதை நிறைவேற்றினார் என்று விளக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கிறார். அன்று நரேந்திர மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூபாய் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு அனைத்து இந்திய குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வாரி வழங்கினார். இந்த வாக்குறுதிகளில் எதை பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் நிறைவேற்றினார் என்பதை அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கமாக கூறுவாரா ? கொடுத்த வாக்குறுதிகளின்படி ஆண்டுக்கு 2 கோடி பேர் வீதம் 11 ஆண்டுகளில் 22 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பு தேடி லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் தினக் கூலிகளாக வேலை செய்கிறார்கள். மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதற்கு இதைவிட எந்த சான்றும் தேவையில்லை.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக மக்கள் விரோத விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரியும், கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் தங்கி உணவு சமைத்து இரவு - பகல் பாராது போராடிய ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் மோடியை விட கல் நெஞ்சக்காரர் வேறு யாராவது இருக்க முடியுமா ? கருப்பு பணத்தை மீட்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அதனால் கருப்பு பணமும் ஒழியவில்லை. கள்ளப் பணமும் ஒழியவில்லை. கருப்புப் பணம் தான் வெள்ளைப் பணமாக மாறி, இந்திய பொருளாதாரம் படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முத்திரைப் பதிக்கும் திட்டங்களாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், தோழி மகளிர் விடுதி, புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டங்கள், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, நமக்கு நாமே திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48, கலைஞர் கைவினைஞர் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு, அதன்மூலம் வேலை வாய்ப்பு பெருக்கம் என நாடு போற்றும் நான்காண்டு என அனைவரும் போற்றுகிற வகையில் சாதனைகளை படைத்து, நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனைகள் மூலமாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை போன்ற காழ்ப்புணர்ச்சியாளர்கள் தமிழ்நாடு அரசு மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வகையில் நீட் நுழைவு தேர்வு திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் மூலமாக இந்தி திணிப்பு, மாநில தொகுதிகளை குறைக்கும் வகையில் மக்களவை தொகுதி சீரமைப்பு, நிதிப் பகிர்வில் புறக்கணிப்பு, வெள்ள நிவாரண மறுப்பு, சிறுபான்மையினரை வஞ்சிக்கும் வக்பு வாரிய சட்டத் திருத்தம், குடியுரிமை சட்டத் திருத்தம், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி மறுப்பு, மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் 10 ஆண்டுகளில் 3544 மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், தமிழ்நாடு ஆளுநர் மூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடி உரிமைகளை பெறுகிற அவலநிலை என தமிழகத்தை வஞ்சிக்கிற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுதான் ஒன்றிய மோடி அரசின் தமிழ்நாட்டை பழிவாங்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளின் பட்டியலாகும். இதற்குப் பிறகும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பேசும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தனது அவதூறு பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. அமித்ஷா உள்ளிட்டவர்கள் மூலமாக எத்தகைய உத்திகளை கையாண்டாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. போன்ற வகுப்புவாத நச்சு சக்திகள் தலை தூக்க முடியாத வகையில், தமிழ்நாட்டு மக்களின் விழிப்புணர்வோடும், பேராதரவோடும், தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கட்டுக்கோப்பான ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணி முறியடிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

congress Selvaperunthagai Narendra Modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe