Advertisment

“பொறுப்புள்ள அரசியல் கட்சி இது போன்று பேசலாமா?” - நா.த.க.வுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

madurai-high-court-our

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் தான் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு கட்சியினரும் மடப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Advertisment

அந்த வகையில் இந்த காவல் மரணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொள்ளவில்லை இதனால் கடந்த 8ஆம் தேதி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மானாமதுரை டி.எஸ்.பி. அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மானாமதுரை டி.எஸ்.பி. போராட்டம் நடத்த  அனுமதி மறுத்துவிட்டார். அதோடு 8ஆம் தேதி கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாரச் சந்தை கூட  உள்ளது. எனவே ஆர்ப்பாட்டத்திற்குப் பாதுகாப்பு கொடுப்பது இயலாது எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஒன்றினை கடந்த 7ஆம் தேதி (07.07.2025) தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்த விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 8ஆம் தேதி (08.07.2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு அனுமதி கோரி காவல்துறைக்கு விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (09.07.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “காவல்துறையினரும், நீதிமன்றமும் உரியக் காரணம் கூறி அனுமதி மறுத்த பிறகும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறாகப் பேசுகிறார். தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறுகிறார்” எனத் தெரிவித்தார். இந்த சூழலில் நீதிபதி, “ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி இது போன்று பேசலாமா?. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டதேவி கோவில் தேரோட்டம் உரியப் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அன்று அனுமதி வழங்கவில்லை. இந்த சூழலில் இதைப்புரிந்து கொள்ளாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல. ஒரு அரசியல் கட்சிக்குப் போராட்டம் நடத்துவதற்கும், பொதுமக்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் உரிமை உள்ளது.

Advertisment

அதேபோன்று பொதுமக்களின் நலனும் அவர்கள் பாதிக்காமல் இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். நாட்டின் குடியரசுத் தலைவர் முதல் சாதாரண குடிமகன் வரை சட்டத்தின் முன் அனைவரும் சமம். மேலும் இது போன்ற அவதூறு கருத்துக்களைப் பேசிய நபர்கள் மீது காவல்துறை ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை? எனச் சரமாரியான கேள்விகளை நீதிபதி  எழுப்பினார். அதோடு, “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மனுதாரர் புதிதாக மானாமதுரை காவல் டி.எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். அதன் பின்னர் 2 4 மணி நேரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி. இந்த மனு மீது உரிய முடிவை அறிவிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ntk seeman DSP manamadurai thirupuvanam Naam Tamilar Katchi madurai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe