Skip to main content

வேலைவாய்ப்பில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வளாகத் தேர்வு...!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Campus interview for Students in Erode Polytechnic College

ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் உலகின் தலைசிறந்த மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான பிரேக்குகளை உற்பத்தி செய்யும் டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான “பிரேக்கஸ் இந்தியா” நிறுவனம் தனது வளாகத் தேர்வினை(campus interview) அண்மையில் நடத்தியது.

ஸ்ரீ நந்தா அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்வளாகத் தேர்வின் துவக்க நிகழ்ச்சியினை ‘பிரேக்ஸ் இந்தியா” நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன் தனது குழுவினர்களுடன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜி. மோகன்குமார் ‘பிரேக்ஸ் இந்தியா” நிறுவனத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வரவேற்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பிரேக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன் பேசுகையில், “எங்களது  நிறுவனமானது 1981ல் தொடங்கப்பட்டு தற்போது 12 வகையான உற்பத்தி ஆய்வுக்கூடங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார். இவ்வளாகத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் நாங்கள் கொண்டு செல்லத் தயாராக உள்ளோம். ஆனால் நல்ல திறமையுள்ள மாணவர்கள் மட்டும் தேவைப்படுவதால் அதற்குரிய தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்க உள்ளோம்.

தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக இக்கல்லூரிக்கு வரும் நோக்கம் யாதெனில், இங்கு பயின்று வரும் மாணவர்கள் நல்ல துடிப்புள்ளவர்களாகவும், தான் ஏற்றுக் கொண்ட பணியினை கண்ணும் கருத்துமாக செய்வதே ஆகும். எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது மலேசியா, சிங்கப்பூர், ஐப்பான் போன்ற நாடுகளில் உள்ள நான்கு சக்கர வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதைக் கூறுவதில் பெருமையடைகிறோம். இவ்வளாகத் தேர்வின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு கால பயிற்சியும், அதற்குரிய உதவித்தொகையும் வழங்கப்படும்” என்றார்.

பின்னர் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தனது  வேலைவாய்ப்பிற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்கள். இவ்வளாகத் தேர்வினை ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூ:ர்த்தி,    முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அரசுப் பள்ளி வகுப்பறையில் நுழைந்த விஷபாம்பு. அலறியடித்து ஓடிய மாணவர்கள்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
venomous snake entered a government school classroom

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 125 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் பள்ளியில் வகுப்பறை நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென சுமார் 3 அடி நீலமுள்ள விஷபாம்பு ஒன்று வகுப்பறையில் புகுந்துள்ளது.

இதனால் மாணவர்கள் பாம்பைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஓடிவந்து வகுப்பறையில் இருந்த மாணவ - மாணவிகளை பாதுகாப்பாக வேறு வகுப்பறைக்கு மாற்றினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். 

பள்ளி வளாகத்தை சுற்றி முட்புதர்கள் நிறைந்திருப்பதாலும் போதிய சுகாதார வசதிகள் மேற்கொள்ளாததுமே பாம்புகள் வகுப்பறையில் வர காரணம் என ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் கூறுகின்றனர். உடனடியாக பள்ளி வளாகத்தை சுற்றி துய்மை பணிகளை மேற்கொண்டு புதர்களை  அகற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
According to order of Supreme Court,  results of NEET exam are published

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நேற்று(18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக   நாளை(20.7.2024) மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.   

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. exam.nta.ac.in  என்ற இணையதளத்தில் மையங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.