‘கோவில் கழிவறையில் கேமரா... அலறியடித்த பெண்’ - தீவிர விசாரணையில் போலீஸ்

‘Camera in temple toilet ... screaming woman’- Police in intensive investigation

குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும்சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவி வருகின்றன. ஆனால் இதனையே தவறான வழிகளில் வைக்கக்கூடாத இடங்களிலும் ரகசியமாகப் பொருத்தி வைப்பது வேதனையான விஷயம்.

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் காவல்நிலைய உட்கோட்டப் பகுதியிலிருக்கும் சித்தவ நாயக்கன்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பௌர்ணமி பூஜையும், மாசி மாத கொடை விழாவும் சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல் வாரநாட்களிலும் இங்கு அண்டை மாவட்டத்திலுள்ள மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கி, சுவாமி தரிசனம் செய்வதுண்டு. அதன் பொருட்டு கோவிலில் தங்குமிடம், கழிப்பறை, குளியலறைகளும் கட்டப்பட்டுள்ளன.

நேற்றைய பௌர்ணமி வெள்ளிக்கிழமையன்று ஆலயம் வந்த பக்தர்களில் பெண் ஒருவர் அங்குள்ள குளியலறைக்குச் சென்றுள்ளார்.தற்செயலாக உயரே ஒரு மூலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அலறியடித்து வெளியே ஓடியிருக்கிறார். இது பற்றிய தகவல் காவல்துறைக்குப் போக இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கோவில் சென்று ஆய்வு செய்ததில் பெண்கள் குளியலறை, கழிவறை பகுதிகளில் 3 கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர். அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பீதியைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு எஸ்.பி.யான சரவணன், "அந்தக் கிராமத்தின் கோவில் குளியலறை, கழிவறைகளில் கைப்பற்றப்பட்ட கேமராக்களில் எந்த வகையான பதிவுகளுமில்லை. அச்சம் கொள்ளத் தேவையில்லை. இணைப்புகள் கொடுக்கப்படாமல் டம்மியாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதைப் பொறுத்தியது யார் என விசாரணை நடக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆலய பூசாரி முருகனின் புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

police temple Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe